காட்டு யானைகளின்
பிளிறல் ஓய்ந்திருக்கும்
விழிப்புக்கும் உறக்கத்திற்கும்
இடைப்பட்ட இத்தருணத்தில்
கடவுளைக் கொல்வதென
முகங்கழுவிக் கொண்டு
கருப்புக்குதிரை மீதேறிப்
பிரயாணமாகிறேன்
போர்விமானங்கள்
கண்ணிவெடிகள்
துரோகங்கள்
தூக்குமரங்கள்
கொலைகள்
வன்புணர்ச்சிகள்
உறைந்து கிடக்கும்
குருதிப் படலங்கள்
போதி மரத்தடியில்
சிரிக்கும் புத்தன்
குருதி வெள்ளத்தில்
துடிக்கும் காந்தி
கலவி கொண்ட நிலையில்
சிதறிக்கிடக்கும் சர்ப்பங்கள்
யுகங்கள் தாண்டிக்
கடவுளைக் காண்கிறேன்
படைத்த களைப்பில்
நித்திரையில் கடவுள்
ஆதிப்புணர்ச்சிக்கு தயாராய்
அங்கங்கள் மறைத்தபடி
வெட்கத்தில்
ஆதிமனிதனும் மனுஷியும்
ஆப்பிளின் மிச்சதைப் புசித்து
ஆதிமனிதனையும் ஏவாளையும்
சர்ப்பத்தையும்
கழுத்தறுத்துக் கொன்று
சூன்யமாகிக் கொண்டிருக்கிற
என்னை நோக்கிப்
புன்னகைக்கிறார் கடவுள்.
This comment has been removed by the author.
ReplyDelete