எங்கு திரும்பினாலும் "நான் என்னை இந்தியனாய் உணர்கிறேன்.. இத்யாதி..இத்யாதி.." டெம்ப்ளேட் வாசகங்கள் கொசுக்களின் ரீங்காரம் போல் காதைக் குடைகின்றன. இந்தியா-பாக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது தற்போது சாத்தியமில்லை என்பதால் நாம் நம்மை இந்தியனாய் உணரக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பை வீணாக்கி விடவேண்டாம்.நாம் மட்டுமல்ல பசிப்பிணி மருத்துவர் மன் மோகன் சிங் கூட தன்னை இந்தியனாய் உணர்ந்திருப்பார். கோட்டையில் கொடியேற்றும் போது மட்டுமே அவர் தன்னைப் பிரதமராய் உணர்கிறார் என்பது வேறு விஷயம்.
இந்திய ராணுவத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறை காஷ்மீரிகளின் சுதந்திரக் குரல்வளையை நசுக்கும் இத்தருணத்தில் சுரணையே இல்லாமல் கொடியேற்றி, 'வந்தே மாதரம்' பாடி, விறைத்து நிற்கிறது இந்திய அதிகார வர்க்கம். இன்று காற்றைப்போல் இவர்கள் நுகரும் இந்தச் சுதந்திரத்தை அடையத்தான் காஷ்மீரிகள் நித்தம் நித்தம் உயிர்த்தியாகம் செய்கிறார்கள் என்பதறியாதவர்களா இவர்கள்? இவர்கள் அகராதியில் சுதந்திரமென்பது ஆகஸ்ட் பதினைந்தாம் தியதி பெற்றது மட்டும்தானா?
சொல்லப்போனால் ஆகஸ்ட் பதினைந்தாம் தியதி சுதந்திரம் பெற்றது நாமல்ல, அதிகாரவர்க்கம் பெற்ற சுதந்திரம் அது. காந்தி அரைகுறை ஆடை அணிந்த பக்கிரியாக விக்டோரியா மகாராணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி எளியோருக்கான காலம் வந்து விட்டது என அறைகூவல் விடுத்தார். அவர் கதர்த்துணியாலும், எளிமையாலும் கட்டிப் போட்டிருந்த சாமானியர்களான தேசத்தலைவர்கள் உள்ளுக்குள்ளே ஆட்சிக்கும், அதிகாரத்திற்கும், ஆடம்பரத்திற்கும் ஏங்கிக்கொண்டிருந்தார்கள் என்பது வரலாற்று உண்மை. விளைவு, சுதந்திரம் கிடைத்த தருணத்திலேயே காந்தி உதறித்தள்ளப் பட்டார். ஆட்சி மாறியதும் காட்சி மாறியது.மாளிகை மறுசீரமைப்பு, பகட்டு, ஆடம்பரம் என பல லட்சங்கள் செலவழிக்கப்பட்டன. முதல் குடியரசுத்தலைவரான ராஜேந்திர பிரசாத் தன் மாளிகையை கங்கை நீர் கொண்டு கழுவி பெரிய யாகங்கள் செய்தார் என்பது வரலாறு.
பசியாலும் பஞ்சத்தாலும் வாடும் தமிழர் ஒருபுறம், ஈழ இனப்படுகொலையில் எஞ்சிய தமிழ் மக்கள் அகதிகளாய் இன்னொருபுறமிருக்க பல ஆயிரம் கோடிகள் செலவில் செம்மொழி மாநாடு, தஞ்சை பெரிய கோயில் விழா என அதிகார வர்க்கம் வரலாற்றைப் புனையும் பணியில் மும்முரமாயிருக்கிறது. மத்தியில் நடப்பது இதைவிடப் பெரிய கூத்து. விளையாட்டுக்கான அடிப்படைக் கட்டுமான வசதிகள்கூட இல்லாமல் விளையாட்டு வீரர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பல லட்சம் கோடிகள் செலவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்போகிறார்களாம். யாருக்காக இவ்வளவு செலவு என்பதும் அம்பலமாகி விட்டது. படுகேவலமான வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் விளையாட்டு வீரர்களின் சாபம் இவர்களைச் சும்மா விடாது. நாசமாய்ப் போகட்டும் இந்த அதிகார வர்க்கம்!
காஷ்மீரிகள்,மாவோயிஸ்டுகள்,தமிழர்கள்,தலித்துகள்,பழங்குடிகள்,சிறுபான்மையினர்,பெண்கள்,
பாலியல் தொழிலாளர்கள்,வந்தேறிகள், துடைப்பக்குச்சிகள், சங்குகள், சாமரைகள், ஆலவட்டங்கள், ஜால்ராக்கள், கைப்புள்ளைகள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
சும்மா ஒரு தகவலுக்காக 'புதிய தலைமுறை'யில் படித்த ஒரு செய்தி:
இந்திய ரயில்வேயின் மொத்த இருப்புப்பாதை 64,000 கி.மீ. அதில் நாம் சுதந்திரத்திற்குப் பிறகு போட்டது 10,000 கி.மீ தான். மற்றதெல்லாம் ஆங்கிலேயர் விட்டுச் சென்றவை.